நீட் தேர்வுக்கு வயது தடையில்லை என்பதாலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாலும், நீட் தேர்வர்கள் நம்பிக்கையின்மை உட்பட பல்வேறு சிக்கல்களை எதிர் கொண்டு வருகின்றனர். எனவே, இதனை களையும் பொருட்டு கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு குறைந்த பட்ச மதிப்பெண்கள் என்ன? எதனடிப்படையில் இந்த மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிறது? என்பதை காண்போம்.
நாடு முழுவதும் கடந்த 17ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வு நடைபெற்றது. மொத்தம் 543 நகரங்களில் 3,800க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. 18 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிடித்திருந்த நிலையில், கிட்டத்தட்ட 95% பேர் தேர்வில் பங்கேற்றனர்.
தேர்வுக்கான முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் உத்தேச விடைகளை வெளியிட்டு வருகின்றன. இருப்பினும், தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ உத்தேச விடைக் குறிப்பு இன்று அல்லது நாளைக்குள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
அனைத்திந்திய தரவரிசை பட்டியலின் உச்ச மதிப்பெண் அடிப்படையில் குறைந்தபட்ச மதிப்பெண் விழுக்காடு நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணமாக, கடந்த 2018ம் ஆண்டு பொது பிரிவினருக்கு குறைந்தபட்சம் மதிப்பெண் விழுக்காடு(per centile) 50% ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, தரவரிசைப் பட்டியலின் உச்ச மதிப்பெண் அடிப்படையில் பொது பிரிவு தேர்வரின் குறைந்த பட்ச மதிப்பெண் 119 - 691 என்ற வரம்பில் நிர்ணயிக்கப்பட்டது. அதேபோன்று, பிற்படுத்தப்பட்ட வகுப்புகள், பட்டியல் கண்ட சாதிகள், பட்டியல் கண்ட பழங்குடியினர் வகுப்பினருக்கான 40% விழுக்காட்டாக குறைந்த பட்ச மதிப்பெண் 96 - 118 என்ற வரம்பில் நிர்ணயிக்கப்பட்டது.
இதனடிப்படையில், அனைத்து இந்திய 15% இடஒதுக்கீடு தரவரிசைப் பட்டியல் மற்றும் மாநில தரவரிசைப் பட்டியலை தேசிய தேர்வு முகமை தயாரிக்கும்.
தரவரிசைப் பட்டியலில், இரண்டிற்கும் மேற்பட்ட தேர்வர்கள் சமமான மதிப்பெண்கள் பெற்றால், முதலில் உயிரியல், பின்பு வேதியியல் பாடத்தில் பெற்ற அதிக மதிப்பெண் விவரங்கள் பார்க்கப்படும். அதிலும் சமமாக இருந்தால், மொத்த தேர்வில் தவறான விடைகளை மற்றும் சரியான விடைகளை குறைவாக குறித்தவர்கள், பின்பு வயதில் முதியவர் என்ற முறை கையாளப்பட்டு மூப்பு நிலை நிர்ணயிக்கப்படும்.
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு நீட் வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கேள்விகள் பெரும்பாலும் என்சிஇஆர்டி பாடப் புத்தகத்தை மையமாகக் கொண்டிருந்தன என்றும் கூறப்பட்டது. எனவே, இந்தாண்டு குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்கள் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, நீட் நுழைவுத் தேர்வின் (NEET UG-2022) உத்தேச விடைக்குறிப்பை தேசிய தேர்வு முகமை இன்று அல்லது நாளைக்குள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணைய தளத்தை அவ்வப்போது பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.