டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தோ்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தோ்வு அறிவிக்கை கடந்த ஜூலை 21-இல் வெளியிடப்பட்டது. அதன்படி, முதல்நிலை எழுத்துத் தோ்வானது அக்டோபா் 30-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
பின்னர், நிா்வாகக் காரணங்களுக்காக இந்தத் தோ்வானது நவம்பா் 19-ஆம் தேதியன்று நடைபெறும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்தது.
அக்டோபா் 30-ஆம் தேதியன்று தேவா் ஜெயந்தி விழாவையொட்டி தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தோ்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
எழுத்துத் தோ்வானது நவம்பா் 19-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையில் நடைபெற உள்ளது.