ஆசிரியர் பயிற்சி கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு, கணினி வழியிலான தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில், தமிழ் மொழி கட்டாயத் தாளும் உண்டு.
தமிழக பள்ளி கல்வி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ், ஆசிரியர் பயிற்சி கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளில், விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.இதன்படி, முதுநிலை விரிவுரையாளர்கள் 24; விரிவுரையாளர்கள், 82 மற்றும் இளநிலை விரிவுரையாளர்கள், 49 என மொத்தம், 155 பணியிடங்களை நிரப்ப, கணினி வழி தேர்வு நடத்தப்படுகிறது.
இதுவரை எழுத்து தேர்வு மட்டுமே நடத்தப்பட்ட நிலையில், முதன்முறையாக கணினி வழி தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த தேர்வில் பங்கேற்க உள்ளவர்கள், இந்த ஆண்டு ஜூலை 31ல், 57 வயதை தாண்டியவர்களாக இருக்கக் கூடாது. அறிவிக்கப்பட்ட பாடங்களுக்கு ஏற்ற முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் எம்.எட்., முடித்திருக்க வேண்டும். முதுநிலை விரிவுரையாளர் பணிக்கு, ஐந்து ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். மற்ற பதவிகளுக்கு, ஆசிரியர் பணி அனுபவம் தேவைஇல்லை.
இரட்டை பட்டம் செல்லாது
இரட்டை பட்டம் படித்தவர்கள், இளநிலை மற்றும் முதுநிலையில் வேறு வேறு பாடப்பிரிவுகளை முடித்தவர்களுக்கு அனுமதியில்லை. தேர்வு கட்டணம், பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு, 250 ரூபாய்; மற்றவர்களுக்கு, 500 ரூபாய். 'ஆன்லைன்' வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.இந்த முறை தமிழ் மொழி தகுதித்தாள் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
சரியான விடையை கண்டுபிடிக்கும் வகையிலான வினாத் தாளில், 50 மதிப்பெண்களுக்கு, 30 கேள்விகள் இடம் பெறும். இதில் குறைந்தபட்சம், 40 சதவீதமான, 20 மதிப்பெண்கள் பெற வேண்டும். இந்த மதிப்பெண்கள் இறுதி தரவரிசைக்கு எடுத்து கொள்ளப்படாது. இந்த தாளில் தேர்ச்சி பெற்றால் மட்டும், முக்கிய தாளின் மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படும். முக்கிய பாடத்தில், 70 கேள்விகள்; கல்வி முறை 70; பொது அறிவு, 10 என, 150 கேள்விகள் இடம் பெறும். இவை அனைத்துக்கும் தலா, ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.
இந்த தாளில், பட்டியலினத்தவர் 45 சதவீதமான, 68 மதிப்பெண்; பழங்குடியினர் 40 சதவீதமான, 60 மற்றும் பிற பிரிவினர், 50 சதவீதமான, 75 மதிப்பெண்கள் பெற்றால் தான் தேர்ச்சி பட்டியலில் சேர்க்கப்படுவர் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
1:2 விகிதம்
தேர்வுக்கு பின் தேர்ச்சி பட்டியலில் உள்ளவர்களில், 69 சதவீத இட ஒதுக்கீடு விதிகளின்படி, ஒரு பதவிக்கு இரண்டு பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். பின், இறுதி பட்டியல் வெளியிடப்படும்.தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, கணினி வழி தேர்வு தேதி, விரைவில்அறிவிக்கப்படும்.
மேலும் விபரங்களை, www.trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials
No comments:
Post a Comment