தினமும் 6 முதல் 8 மணி நேரம் தூக்கம் வேண்டும். ஆனால், இரவை தவிர பகல் நேரங்களில் தூங்குவதை மருத்துவர்கள் ஊக்கப்படுத்துவதில்லை.
படிக்கும் நேரத்தில் வரும் பகல் நேர உறக்கத்தை தவிர்ப்பதற்கான சில வழிமுறைகளைப் பார்ப்போம்.
1. உணவு முறை
உணவு முறை என்பது உடலின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வளிக்க வல்லது. பகலில் தூக்கத்தை அல்லது சோர்வை சமாளிக்கக் கண்டிப்பாக உணவு முறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அதிக புரோட்டின், நார்ச்சத்து உள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள், சாலடுகள் போன்றவற்றை உட்கொள்ளுதல் நல்ல பலனை தரும். மேலும் உடலில் குளுக்கோஸ் லெவலை அதிகப்படுத்த சக்கரைக்கு பதிலாக இனிப்பான பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.
2. நன்றாக தூங்குங்கள்
இரவில் சரியாக தூங்காமல் இருப்பது கூட பகலில் முக்கியமாக, படிக்கும்போது தூக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இரவு ஏழு முதல் எட்டு மணி நேர தூக்கம் அவசியம். மன அமைதியுடன் கூடிய ஆழ்ந்த உறக்கம் மிக முக்கியம்.
3. நீர் அருந்துங்கள்
படிக்கும்போது உங்களுக்குத் தூக்கம் வருவதற்கு மற்றொரு காரணம், நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்காததுதான். ஓர் ஆய்வு முடிவு, நீரிழப்பு மூளையை சுருக்கும் என்கிறது. எனவே அடிக்கடி தண்ணீர் அருந்துங்கள். ஒரு நாளைக்குக் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்துவது உடலுக்கு முக்கியம்.
4. சிறிது இடைவெளி விடுங்கள்
தொடர்ந்து 5 முதல் 6 மணிநேரம் படிப்பது என்பது சாத்தியமற்றது. ஒவ்வோர் இரண்டு மணி நேரத்திற்கும் இடையில் 25 நிமிடங்கள் இடைவெளி விடவும். கூடவே அந்த 25 நிமிடங்களுக்கு ஒருமுறை 5 நிமிட இடைவெளி முக்கியம். இந்த இடைவெளியில் உங்களுக்குப் பிடித்ததை செய்யுங்கள். இசை, நடனம், நடைப்பயிற்சி செய்வது, உடற்பயிற்சி செய்வது போன்று செய்யலாம்.
5. பாடங்களை மாற்றுங்கள்
ஒரு சில பாடங்கள் மிகுந்த சோர்வை உண்டாக்கும். அதனால் தொடர்ந்து ஒரே பாடத்தை படிக்காமல், இடையில் உங்களுக்கு பிடித்த பாடங்களை படியுங்கள்.
6. வசதியாக இருக்காதீர்கள்
படிக்கும் போது தூக்கம் வருவதற்கு ஒரு முக்கியக் காரணம், மிகவும் வசதியாக இருப்பது. உங்கள் படுக்கையில் அமர்ந்து படிக்காமல் இருப்பதே இதற்கான முதல் படி. படிக்கும் இடம் மற்றும் தூங்கும் இடம் ஆகியவற்றை தனித்தனியாக வைத்திருங்கள். இதனால் உங்கள் மூளை இரண்டையும் தெளிவாக வேறுபடுத்திக்கொள்ளும்.
உங்கள் முதுகை நேராக வைத்து ஒரு மேசை மற்றும் நாற்காலியில் உட்காருவது நல்லது. படிக்கும் போது விழித்திருக்கவும், கவனம் செலுத்தவும் பிரகாசமான விளக்குகளைப் பயன்படுத்தவும்.
7. மேலும் செய்ய வேண்டியவை...
* அடிக்கடி முகம் கழுவுங்கள், இது உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
* உங்களுடன் நீங்களே பேசுங்கள். தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் வார்த்தைகளுடன் உங்களுடன் நீங்களே பேசுங்கள்.
* கணினியில் படிக்கிறீர்கள் என்றால் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை திரையில் இருந்து கண்ணை எடுத்து சுவரில் பார்க்கவும்.
* படிக்கும்போது உங்களுக்கு தூக்கம் வரும் நேரம், ஒரு சூயிங்கத்தை வாயில் போட்டுக்கொள்ளவும்.
* தனியாகப் படிப்பதை தவிர்த்து, குழுவாகப் படிப்பதும் பலனை தரும்.
* படிக்கும்போது இடையிடையே இசை கேட்பது தூக்கத்தை தள்ளிவைக்கும்.
Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials
No comments:
Post a Comment