தமிழக காவல் துறையில் 10 ஆயிரம் பேரை புதிதாக தேர்வு செய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.*
எனவே, தகுதியுள்ள இளைஞர்கள் கொரோனா காலத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி, காவலர் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், மக்களின் உயிர், உடமைக்கு பாதுகாப்பு அளித்தல் உட்பட பல்வேறு பணிகளை காவல்துறை மேற்கொண்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இணையவழி குற்றங்கள், பொருளாதார குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான குற்றச் செயல்களை தடுக்கவும் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தமிழக காவல் துறையில் காவலர் பற்றாக்குறையும், இதனால் கூடுதல் பணிச்சுமையும் தொடர்ந்து இருந்து வருகிறது. கடந்த 2021 ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி தமிழககாவல் துறைக்கு 1 லட்சத்து 33,198போலீஸார் அரசால் ஒப்பளிக்கப்பட்டது. ஆனால், 1 லட்சத்து 18,881பேர் மட்டுமே பணியில் இருந்தனர்.
இதற்கிடையில், காலி இடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, முதல் கட்டமாக 11,813 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு 2020 செப்.17-ம் தேதி வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக் காவலர்கள், தீயணைப்பு படை வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு அதே ஆண்டு டிச.13-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 26-ம் தேதி முதல் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
அனைத்து தேர்விலும் வெற்றி பெற்ற 10,391 பேருக்கு அடுத்த மாதம் முதல் 8 மாதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முடிந்த பிறகு, தமிழக காவல் துறையில் முறைப்படி அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
இதேபோல, 969 காவல் உதவி ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்வையும் சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தியது.
இந்நிலையில், தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக் காவலர்கள், தீயணைப்பு படை வீரர்கள் என சுமார்10 ஆயிரம் பேரை புதிதாக தேர்வுசெய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
சுமார் 450 காவல் உதவி ஆய்வாளர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
எனவே, வேலை தேடும் இளைஞர்கள், ஆர்வம் உள்ள தகுதிவாய்ந்த பட்டதாரிகள் கொரோனா ஊரடங்கு காலத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி, காவலர் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment