
இம்மாத இறுதியில் நடைபெறவிருந்த, சி.ஏ., தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், நவம்பர் மாத தேர்வுடன் சேர்த்து, இந்த தேர்வுகள் நடத்தப்படும் என்றும், ஐ.சி.ஏ.ஐ., எனப்படும், இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சி.ஏ., எனப்படும் பட்டய கணக்காளர்களுக்கான தேர்வு, ஆண்டுதோறும் மே மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மே மாத தேர்வு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஒத்தி வைக்கப்பட்டு, ஜூலை, 29 முதல், ஆகஸ்டு, 16ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, பெற்றோர் சங்கத்தினர், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு, நீதிபதிகள் கான்வில்கர், சஞ்சிவ் கண்ணா அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பட்டய கணக்காளர் நிறுவன தரப்பு வழக்கறிஞர் கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவலால், ஜூலை, 29 முதல், ஆகஸ்டு, 16ம் தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்த, சி.ஏ., தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. மே மாத பருவத் தேர்வு, நவம்பர் மாத தேர்வுடன் சேர்த்து நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்