புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் . சத்துணவு திட்டப் பயனாளிகளுக்கு கொரனா வைரஸ் தொற்று காலத்தில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதற்காக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்:
1. சத்துணவுத் திட்ட உலர் உணவுப் பொருட்களை , பள்ளி வாரியாக , வகுப்பு வாரியாக பயனாளிகளுக்கு வழங்குவதற்கான நாள் மற்றும் நேரம் குறித்த அட்டவணையினை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்களது நேரடி கண்காணிப்பில் தயார் செய்தல் வேண்டும் .
2. பள்ளி வாரியாக , வகுப்பு வாரியாக பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரால் , பயனாளிகள் தெரிந்துக்கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்தப்பட வேண்டும்.
3. உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்களை பயனடையும் மாணவ மாணவியர்களின் பெற்றோர் / பாதுகாவலர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பள்ளிகளில் ஒட்டி வைக்கப்படவேண்டும்.
4. மாணவ மாணவியர்கள் பயிலும் பள்ளிகளிலேயே , அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர் / தலைமை ஆசிரியைகளின் மேற்பார்வையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படவேண்டும். உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதை கண்காணித்து சரியாக வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் , துணை வட்டார வளர்ச்சி அலுவலர் , விரிவாக்க அலுவலர் ( சமூக நலம் ) , ஊர் நல அலுவலர் ( மகளிர் ) மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழு , வட்டார வளர்ச்சி அலுவலரால் அமைக்கப்படவேண்டும்.
5. மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களால் அதே போன்ற குழு நகர்புற பகுதிகளிலும் அமைக்கப்படவேண்டும்.
6. மாணவ மாணவியர்களின் ஏதாவது ஒரு அடையாள அட்டை / அத்தாட்சியுடன் , பயனாளிகள் அல்லது அவர்களின் பெற்றோர் / பாதுகாவலர்கள் , குறிப்பிட்ட நாட்களில் அந்தந்த பள்ளிகளுக்கு பைகளுடன் வந்து உலர் உணவுப் பொருட்களை பெற்றுச் செல்ல வேண்டும்.
7. மாணவ மாணவியர்களின் அடையாள அட்டை / அத்தாட்சியை பள்ளியின் தலைமையாசிரியர் சரிபார்த்து மாணவரது பெயர் , பயிலும் வகுப்பு மற்றும் பிரிவு ஆகிய விவரங்களை ஒரு பதிவேட்டில் பதிவு செய்து , ஒப்புகையை பெற்ற பின்னர் , மாணவரது பெயர் மற்றும் பயிலும் வகுப்பு குறிப்பிடப்பட்ட ஒரு வில்லையை ( Token ) பயனாளிகளுக்கு வழங்கவேண்டும்.
8. அந்த வில்லையை சத்துணவுப் பணியாளரிடம் ஒப்படைத்து உலர் உணவுப் பொருட்களை பயனாளிகள் ' * பெற்றுக்கொள்ளவேண்டும் . சத்துணவுப் பணியாளர் , வில்லையை அதற்குரிய பதிவேட்டில் ஒட்டி வைக்க வேண்டும்.
9. சமூக இடைவெளியை பின்பற்றியும் முக கவசம் அணிந்தும் உலர் உணவுப் பொருட்களை பெற்றுக்கொண்ட பின்னர் , பயனாளிகள் வேறு எந்த இடத்தையும் தொடாமல் உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேறிவிடவேண்டும்.
10. சத்துணவுத் திட்ட மையங்களில் தற்பொழுது இருப்பில் உள்ள அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றின் விநியோகம் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும் . மேலும் தேவைப்படின் , தேவைக்கேற்ப தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடமிருந்து அரிசி மற்றும் பருப்பு ஆகியவை உடனடியாக கொள்முதல் செய்யப்படவேண்டும்.
11.சத்துணவு அமைப்பாளர் , சமையலர் , சமையல் உதவியாளர் ( தலைமையாசிரியர் முன்னிலையில் , எடை இயந்திரத்தில் சரியான அளவிற்கு தரப்படுத்தப்பட்ட அளவீடு பாத்திரம் மூலம் ) உணவு பொருட்களை அளந்து பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்.
12. பள்ளிகளில் உலர் உணவுப் பொருட்கள் எந்த இடர்பாடும் இல்லாமல் முறையாக வழங்கப்படுவதை மேற்பார்வையிடும் பொருட்டு ஒவ்வொரு வட்டாரத்திற்கும் மாவட்ட அளவிலான ஓர் அலுவலரை , மாவட்ட ஆட்சித் தலைவர் நியமிக்க வேண்டும் . மேலும் , மாவட்ட ஆட்சியரின் நேரடிக் கண்காணிப்பில் எவ்வித புகார்களுக்கும் இடமின்றி இதனை செயல்படுத்த வேண்டும்.