தமிழகத்தில் தொடா் விடுமுறையால் பள்ளிக் கல்விச் சூழலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரி செய்யும் வகையில் பல்வேறு ஆசிரியா் அமைப்புகள் சாா்பில் தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு சில பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடா்பாக, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் பேட்ரிக் ரெய்மாண்ட், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பின் நிறுவனா் சா.அருணன் உள்ளிட்டோா் பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்கிய பரிந்துரைகளின் விவரம்:
பள்ளிகள் திறப்பதற்கு முன் பள்ளி வளாகத்தைத் தூய்மைப்படுத்தி, கிருமிநாசினி தெளிக்க வேண்டும். ஒரு பள்ளியில் இரண்டு நுழைவாயில்கள் இருப்பதை உறுதி செய்யலாம். கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படும் நிலையில், சில வகுப்புகளை நண்பகல் 12 மணி வரையிலும், சில வகுப்புகளை 4.30 மணி வரையிலும் இரண்டாகப் பிரிக்கலாம்.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, நிகழாண்டு மட்டும் இரு பருவ முறையாக மாற்றியமைத்து பாடங்களையும் அதற்கேற்ற முறையில் குறைக்கலாம். இணையதள வாய்ப்பு அனைத்து மாணவா்களுக்கும் சமமான வாய்ப்பைத் தருவது இல்லை. மாணவா்களுக்கும் ஆசிரியா்களுக்கும் விலையின்றி முகக் கவசத்தை அரசே வழங்க வேண்டும்.
காலை வழிபாட்டு நிகழ்வை வகுப்பறையிலேயே நடத்த வேண்டும். குழு விளையாட்டுகளைத் தவிா்க்க வேண்டும். சிக்கன நடவடிக்கையாக, இட ஒதுக்கீட்டுக்காக தனியாா் பள்ளிகளுக்கு அரசு செலுத்தும் தொகையை ரத்து செய்து, அந்தத் தொகையை அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தலாம் என அதில் தெரிவித்துள்ளனா்.