ஜார்க்கண்ட் மாநிலக் கல்வி அமைப்பைச் சீரமைக்கும் பணிகளில் அம்மாநில பள்ளிக் கல்வித்துறை தீவிரமாக இறங்கி இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலை என்ற சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று ஜார்க்கண்ட மாநில பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அமைச்சர் ஜகர்நாத் மதோ நேற்று பேசினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
"அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலை கொடுக்கப்பட்ட வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. தனியார் பள்ளிகளில் படித்துவிட்டு அரசுப் பணிக்கு மக்கள் முயல்வதில் நியாயம் இல்லை. அரசாங்க வேலை வேண்டுமென நினைத்தால் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் கல்வி அமைப்பை மேம்படுத்த இதுபோன்ற கறாரான நடவடிக்கைகள் அவசியம். இருப்பினும் பொதுமக்களின் கருத்துக் கேட்கப்பட்டு ஒப்புதல் பெற்ற பிறகே இந்தத் திட்டத்தைச் சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆசிரியர்களுக்குக்
கற்பித்தலுக்கு அப்பாற்பட்டு இதர பணிகள் ஒப்படைக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படிச் செய்தால் கற்பித்தல் பணியில் ஆசிரியர்களால் திறம்பட ஈடுபட்டு மாணவர்களுக்குத் தரமான கல்வியைப் போதிக்க முடியும்.
அரசுப் பள்ளிகளில் படித்து வரும் ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை மாதந்தோறும் அரசாங்கம் செலவழித்து வருகிறது. ஆனாலும் சாரைசாரையாகத் தனியார் பள்ளிகளை நோக்கியே மக்கள் படையெடுக்கிறார்கள். இந்நிலையை மாற்றி அதிக எண்ணிக்கையிலான பெற்றோர், தங்களுடைய குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் விதமாக அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும்."
இவ்வாறு அமைச்சர் ஜகர்நாத் மதோ தெரிவித்தார்.
No comments:
Post a Comment