Search

10, பிளஸ் 2விற்கு இன்று முதல் பாட புத்தகம்…மடிக்கணினியில் பதிவிறக்கவும் ஏற்பாடு

Tuesday, 14 July 2020

முதற்கட்டமாக 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு இன்று முதல் பாட புத்தகங்கள் விநியோகம் செய்யப்படுகிறது.தமிழகத்தில் 2020-2021ம் கல்வியாண்டிற்கான விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுகள் தமிழ்நாடு பாடநுால் கழகத்தால் அச்சிடப்பட்டு, மாவட்டம் வாரியாக சி.இ.ஓ.,அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கொரோனா காரணமாக, பள்ளிகள் திறக்க தாமதமாவதால் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு வரவழைத்து பாட புத்தகங்கள் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.கடலுார் மாவட்டத்தில், கடலுார், வடலுார், சிதம்பரம், விருத்தாசலம் என, நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளது. மாவட்டத்தில் 1,300க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிப் பெறும் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் உள்ளனர்.

இவர்களுக்கு தேவையான புத்தகங்கள் பாட வாரியாக சி.இ.ஓ.,அலுவலகத்தில் இறக்கி வைத்து, வடலுார், சிதம்பரம், விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலகங்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டன. பின்னர் அங்கிருந்து, அந்தந்த பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் அனுப்பப்பட்டன. முதற்கட்டமாக 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு இன்று (15ம் தேதி) முதல் புத்தகங்களை வழங்கஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மாவட்டத்தில் அரசு, அரசு உதவிப் பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பாட புத்தகங்கள் வழங்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு 20 பேருக்கு புத்தகம் வழங்க வேண்டும். பள்ளி வளாகங்களில் கிருமி நாசினி, பிளிச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும். கையுறை, முகக் கவசம் அணிய வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் விநியோகம் மட்டுமின்றி சில பாடங்களின் குறிப்புகளை வீடியோ பதிவாக காணும் வகையில் உயர்ரக கணினி ஆய்வகத்தில் உள்ள கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.வீடியோ பதிவான பாட குறிப்புகளை மாணவர்களின் மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியர்கள் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு சென்று வீடியோ பதிவு பாட குறிப்புகளை பதிவேற்றம் செய்து கொள்ள பென்டிரைவ் அல்லது மடிக்கணினி கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One