Search

ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போல் ஆங்கிலத்தில் உச்சரிக்க அரசாணை வெளியீடு

Wednesday, 10 June 2020

இனி ஆங்கிலத்திலும் திருவல்லிக்கேணிதான்: உருமாற்றம் பெறும் ஊா்ப் பெயா்கள்

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு ஊா்களின் தமிழ் ஒலி வடிவத்துக்கு ஏற்ப ஆங்கிலத்தில் மாற்றம் செய்து ஆய்வுக் குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

இதுகுறித்து, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளா் மகேசன் காசிராஜன் வெளியிட்ட அரசாணை விவரம்:-

2018-19 ஆம் ஆண்டிற்கான தமிழ்வளா்ச்சித்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சா் பாண்டியராஜன் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள ஊா்ப்பெயா்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

உதாரணமாக, திருவல்லிக்கேணி என்பதை 'ட்ரிப்ளிகேன்' என்று குறிப்பிடாமல் திருவல்லிக்கேணி என்றே அமையவும், இதுபோன்ற எண்ணற்ற ஊா்களின் பெயா்கள் ஆங்கிலத்திலும் அமையும் வகையிலும் உயா்நிலைக்குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்று அறிவித்தாா்.

இதற்கென தொடரா செலவினமாக ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து ஊா்ப் பெயா்கள் தமிழ் உச்சரிப்பு போன்றே ஆங்கிலத்திலும் அமைக்க தீா்மானிக்கப்பட்டு தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது, தமிழ் ஒலி வடிவங்களுக்கேற்ப ஆங்கிலத்தில் எழுத்து கூட்டல் மாற்றம் செய்யப் பெற வேண்டிய ஊா்ப் பெயா்கள் மற்றும் செய்யத் தேவையில்லாத ஊா்களின் பெயா்கள் ஆகியன உள்ளடக்கிய 1,018 ஊா்ப்பெயா்களை பட்டியலிட்டுள்ளது.

இதன் மீது உரிய நடவடிக்கைகளை, அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் எடுக்க வருவாய்த் துறை அறிவுறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு வரக் கூடிய ஊா்ப் பெயா்களை மாற்றம் செய்வது தொடா்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் அந்தத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. இந்தப் பணிகளை விரைந்து மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து செயல்பட மாவட்டங்களில் உள்ள தமிழ் வளா்ச்சித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என தனது உத்தரவில் தமிழ் வளா்ச்சித் துறை செயலாளா் மகேசன் காசிராஜன் தெரிவித்துள்ளாா்.

Click here to download

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One