நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பே அரசுக்கு முக்கியம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காலத்துக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி செயலாளர் அனிதா கார்வல் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமாரும் கலந்துகொண்டு, மாநில அரசின் சார்பில் கருத்துகளை முன்வைத்தார்.
ஊரடங்குக்குப் பிறகான பள்ளிகள் திறப்பு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு, பள்ளிகளில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தேர்வுகளை நடத்துதல், ஆன்லைன் வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு கருத்துகள் பெறப்பட்டதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பே அரசுக்கு முக்கியம் என்று தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பொக்ரியால், மாநில அரசுகள் முன்வைத்த கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை மத்திய சுகாதாரத்துறைக்கு அனுப்பி உள்ளதாகவும், அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வுகளை நடத்துவது தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment