தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையில் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்திய தோடு கடந்த சில ஆண்டுகளாக நவீனத் தொழில் நுட்பங்களையும் அறிமுகப்படுத்தி, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெருமளவில் பயன்படும் வகையில் சில செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
அதில் மிக முக்கியமானது தமிழ்நாடு ஆசிரியர் முகமை மற்றும் தீக்ஷா எனப்படும் தொழில்நுட்பங்களாகும்.
இவை இரண்டின் மூலமும் ஆசிரியர்கள் தங்களுடைய திறமையை தொழில்நுட்ப ரீதியாக வளர்த்துக் கொள்ளவும், தேவையான பாடத் திட்டங்களை பெற்று தங்களுடைய கற்பித்தலை வளப்படுத்திக்கொள்ளவும்,
மாணவர்கள் தங்களுக்குத் தேவையான கல்வித் தொழில்நுட்ப வசதிகளைப் பெற்றுக் கொள்ளவும் இது மிகுந்த அளவில் பயன்பட்டு வருகிறது.
இன்னும் சொல்லப்போனால் தீக்ஷா தொழில்நுட்பத்தை இந்திய அளவில்
அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய பயனாளர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இச்செயல்பாடுகளை ஒருங்கிணைப்பு செய்வதிலும், மாநிலம் முழுக்க இருக்கின்ற திறமைவாய்ந்த தொழில்நுட்ப ஆசிரியர்களிடமிருந்து கற்றல் கற்பித்தல் வளங்களை பெற்று உள்ளீடு செய்வது வரையிலான கல்வி தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இடைநிலைஆசிரியர் சதீஷ் என்பவரது பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகின்றது.
இவரது சீரிய பணியை அங்கீகரித்துப் பாராட்டும் வகையில் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் ஆகியோரது முன்னிலையில் மாநிலத் திட்ட இயக்குனர் திரு சுடலைகண்ணன் ஐஏஎஸ் அவர்கள் *Certificate of Excellence* என்கிற விருதை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்களது கரங்களால் வழங்கிப் பெருமைப் படுத்தினார்.
இதுகுறித்து ஆசிரியர் சதீஷிடம் கேட்டபொழுது, இது மாநிலம் முழுவதும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கிடைத்த விருதாகக் கருதுகிறேன் எனச் சொல்லி மகிழ்ந்தார்
No comments:
Post a Comment