கரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தியுள்ள ஊரடங்கு இன்னும் அமலில் இருப்பதால், தொழில்கள் முடங்கியதுடன் தொழிலாளர்களின் வாழ்க்கையும் முடங்கியுள்ளது. அன்றாடம் உணவுக்கே திண்டாடும் நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில் தான் நலிவடைந்த மக்களுக்குத் தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் பயிலும், நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு, கரோனா நிவாரணம் வழங்கியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 800- க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி மாணவர்கள் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து 13 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தொடர் சாதனையைத் தக்க வைத்துள்ளனர். தொடர் சாதனையைப் பார்த்து அருகில் உள்ள பேராவூரணி நகரில் இருந்தும் பலர் தங்கள் குழந்தைகளை அந்தப் பள்ளியில் சேர்த்துள்ளனர். குறிப்பாக இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் 80% மாணவர்கள் விவசாயிகளின் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, இப்பள்ளியில் பயிலும் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் சிரமப்பட்டு வருவதை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் 264 மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்து, தங்கள் சொந்தப் பணத்தில் தலா ரூபாய் 500 வீதம், ரூபாய் 1 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் அரிசி, மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை வழங்கினர்.
புதன்கிழமை மாலை சமூக இடைவெளியோடு பள்ளியில் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை கு.மகேஸ்வரி தலைமை வகித்தார்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.கே.இராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் ஏ.பிரகாஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.
இதேபோல புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டத்தில் பல ஊர்களில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் மாணவர்களின் குடும்ப நிலை அறிந்து உதவிகள் செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment