Search

தினம் ஒரு புத்தகம் -அன்பாசிரியர் (50 ஆசிரியர்களின் வகுப்பறை நிகழ்வுகள்)

Thursday, 5 March 2020


இந்து தமிழ் திசை கடந்த வாரம் ஞாயிறன்று கல்வி அமைச்சர் அவர்களால் வெளியிட்ட நூல் இது. நூலாசிரியர் ரமணி பிரபா தேவி .

இன்றைக்கு ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்கு முன்பு ,ஆன்லைன் இந்துவில் ஒரு புதிய முயற்சியாக நிருபர்  ரமணிப் பிரபா அவர்களின் பணியாக உருவானது தான்  " அன்பாசிரியர் "தொடர்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குறித்த எதிர்மறைக் கண்ணோட்டம் இருந்த காலகட்டத்தில்  2015 களில் நேர்மறையாக நம்பிக்கை அளிக்கக் கூடிய செயலை முன்னெடுத்த இந்து தமிழ் திசையின் பணிதான் அன்பாசிரியர் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம் என்ற ஒற்றை சொல்லில் பல எதிர்பார்ப்புகளையும்  மனதுள் வைத்து இயங்குவது அடிப்படையில் மனித இயல்பு. அப்படி ஆசிரியர்களது மனதிலும் ஏக்கங்கள் இருந்த காலங்கள் தொடர்ந்து இருக்கத்தான் செய்கின்றன. அதற்குரிய பணிகளை அவர்கள் செய்திருப்பதும் ஒரு முக்கிய காரணம். அந்த வகையில் அங்கு 50 ஆசிரியர்களது பணிகளை அங்கீகரித்து இப்புத்தகம்வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வகுப்பறையும் அன்பான ஆசிரியர்களால் தான் நிரம்பி இருக்கும். அந்த அன்பு ஏதேனும் ஒரு விதத்தில் வெளிப்படும். சிலரால் பாடப் பொருள் அறிவாக செறிவாக குழந்தைகளுக்கு வழங்கப்படும். சில ஆசிரியர்கள் அன்பான அணுகுமுறை , சிலரோ தன் அன்பின் வெளிப்பாட்டை மாணவர்களைத் திட்டுவதன் மூலம் கூட வெளிப்படுத்திடுவர். சிலர் ஆசிரியராக தனது பொறுப்புகளையும் கடமைகளையும் செய்து விட்டு நிம்மதியாக குழந்தைகளுடன் இயங்குவர் . சிலர் தன் கைக் காசைப் போட்டும் சிலர் அடுத்தவரிடம் பொருள் பெற்றும் தன் பள்ளிக் குழந்தைகளுக்கு எதையாவது செய்து கொண்டு இருப்பர்.
இணையப் பயன்பாடு  பெருகிவிட்ட இந்நாட்களில் பலர் தங்கள் செயல்பாடுகளை வெளிப்படுத்திக்  கொண்டுள்ளனர். பல்லாயிரம் ஆசிரியர்கள் அது பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் எப்போதும் தங்கள் அன்பை தன்னைச் சுற்றியுள்ள  குழந்தைகளிடம்  வெளிப்படுத்தி வாழ்ந்து வருகின்றனர். என்ன ... அதன் அளவில் கூடக் குறைய இருக்கலாம் , அவ்வளவு தான்.

அப்படியான ஆசிரியர்களில் தங்கள் கண்ணுக்கெட்டிய , காதுகளுக்கெட்டிய மிகச் சிறிய எண்ணிக்கையிலான 50 ஆசிரியர்களைத் தான் இந்து தமிழில் பணியாற்றி  வரும் ரமணிப் பிரபா நிருபர் அவர்கள் இந்துவின்  இணையப் பக்கத்தில் தொடராக எழுதினார்.
இவர்கள் அனைவரையும் அன்பாசிரியர்களின் முன்னோடிகள் என நினைவுப் பரிசை விருதாக அளித்து கெளரவப் படுத்தினார் தற்போதைய தமிழக அரசின் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் .

இப்புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவர் பள்ளிப் பருவமும் மனதுக்கு நெருக்கமான ஆசிரியர்களும் நிச்சயம் நினைவில் வருவர் என்பது உறுதி.

பக்கங்கள் : 216
விலை: 200

-பகிர்வு உமா மகேஸ்வரி

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One