Search

தகுதி தேர்வு எழுதாவிட்டால் வேலையைவிட்டு விலகவேண்டும்: ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு மும்பை ஐகோர்ட் கண்டிப்பு

Tuesday, 11 February 2020

மும்பை: மகாராஷ்டிராவில் 2009ம் வருடத்திய குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கல்வித்துறை இயக்குனர் (ஆரம்ப கல்வி) உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தார். அதன்படி, அனைத்து ஆரம்ப பள்ளி ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.) எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கிறது.


ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடையாத ஆசிரியர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள். பள்ளி நிர்வாகம் இந்த ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்கத்தவறினால் அவர்களுக்கான சம்பள பொறுப்பை அந்த பள்ளிகள்தான் ஏற்க வேண்டும். அரசு எந்தவொரு தொகையையும் அவர்களுக்கு வழங்காது என்று அதிகாரிகள் விளக்கம் அளித்து இருந்தனர். இந்த நிலையில் கல்வித்துறை இயக்குனர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் சார்பில் பல மனுக்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. தங்களை வேலையில் இருந்து எடுத்தால் அது கல்வி முறையில் நேரடி பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.


இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.தர்மாதிகாரி மற்றும் ரியாஸ் சாக்ளா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிரியர்களுக்கு சலுகை காட்ட மறுத்த நீதிபதிகள், 'தகுதி தேர்வு எழுதுங்கள் அல்லது வேலையை காலி செய்துவிட்டு கூடுதல் தகுதி கொண்டவர்களுக்கு வழிவிடுங்கள்' என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் மகாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One