குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் ( திருத்தம் ) சட்டம் , 2019 இன்படி மாநிலப் பாடத்திட்டத்தினை பின்பற்றும் அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு 2019 - 2020ஆம் கல்வி ஆண்டின் இறுதியில் பொதுத் தேர்வு நடத்த பார்வை 3 இல் கண்ட அரசாணையில் அனுமதி வழங்கப்பட்டது . பார்வை 4 இல் காணும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டது . பார்வை 6 இல் கண்ட பொதுப்பள்ளி கல்வி வாரியக் கூட்டத்தின் முடிவின் அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்பட்ட நெறிமுறைகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு திருத்திய நெறிமுறைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கீழ்க்கண்டவாறு அனுப்பப்படுகிறது .
1 . தேர்வு மையம் அமைத்தல்
அனைத்து மாவட்டங்களிலும் மாநில பாடத்திட்டத்தினைப் பின்பற்றி 5ஆம் வகுப்பு வரை நடைபெறும் அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக செயல்படுதல் வேண்டும் . மேலும் , அதேபோன்று மாநில பாடதிட்டத்தினைப் பின்பற்றி 5 , 8ஆம் வகுப்புகள் நடத்தும் அனைத்து வகைப் பள்ளிகளும் தேர்வு மையமாக அமைத்தல் வேண்டும் .
2 . வினாத்தாள் கட்டுக்காப்பு மையம் அமைத்தல்
தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து குறுவள மையங்களும் ( CRC ) வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களாக அமைக்கப்படுதல் வேண்டும் . இவ்வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தின் காப்பாளராக அம்மையம் அமைந்துள்ள பள்ளியின் தலைமை ஆசிரியரை நியமித்தல் வேண்டும் . குறுவள மையம் அமைந்துள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர் வேறு தேர்வுப்பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தால் அப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரை வினாத்தாள் கட்டுக்காப்பாளராக நியமிக்கப்படுதல் வேண்டும் . வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திலிருந்து வினாத்தாட்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்படுதல் வேண்டும் . 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்குரிய வினாத்தாட்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் மந்தண முறையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் . முதன்மைக் கல்வி அலுவலர்கள் அவற்றை மந்தண முறையில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் . தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் தேர்வு நடைபெறும் ஒவ்வொரு நாளும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கு குறித்த நேரத்தில் சென்று வினாத்தாட்களை பெற்று தேர்வு நடத்துதல் வேண்டும் . தேர்வு முடிந்தவுடன் விடைத்தாட்களை வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் அன்றைய தினமே ஒப்படைத்தல் வேண்டும் .
3 . தேர்வுக் கட்டணம் வசூல் செய்தல்
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் , 2009 , இன்படி , 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு இலவச மற்றும் கட்டாயக்கல்வி அளிக்க வேண்டும் என்பதால் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் . மேலும் பிற அரசுத் துறையின் கீழ் செயல்படும் அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் . மேலும் , குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் , 2009 , பிரிவு 12 ( 1 ) ( c ) இன் கீழ் 25 % இடஒதுக்கீடு அடிப்படையில் தனியார் சுயநிதிப் பள்ளிகள் , மெட்ரிக்குலேசன் / மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கை செய்யப்பட்ட மாணாக்கர்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் . தனியார் சுயநிதிப் பள்ளிகள் , மெட்ரிக்குலேசன் / மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் , 5 ஆம் வகுப்பு மாணாக்கர்களிடம் ரூ . 100 / - ம் , 8 ஆம் வகுப்பு மாணாக்கர்களிடம் ரூ . 200 / - ம் தேர்வுக் கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும் . இத்தொகை சார்ந்த பள்ளிகளிலிருந்து வினாத்தாள் கட்டுக்காப்பு மைய ( CRC மைய ) தலைமை ஆசிரியர் வழியாக மாவட்ட தேர்வுக்குழுவிற்கு ஒப்படைக்க முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் . மாணாக்கர்களிடம் வசூலிக்கப்படும் தொகையினை மாவட்டத் தேர்வுக்குழு , வங்கியில் செலுத்துவதற்கு ஏதுவாக , முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தலைமையிடத்து மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோரைக் கொண்ட இணைக் கணக்குடன் ( Joint Account ) கூடிய வங்கிக் கணக்கு துவக்கப்படுதல் வேண்டும் . இவ்வங்கி கணக்கிலிருந்து மேற்கொள்ளப்படும் செலவினம் அனைத்தும் மாவட்ட தேர்வுக்குழு ஒப்புதல் மூலமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் . இப்பொதுத் தேர்வுக்கான வரவு - செலவு , தேர்வுப்பணி முடிந்த உடன் Chartered Accountant வாயிலாக தணிக்கை செய்யப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் முறையாகக் கோப்புப் பராமரிக்கப்பட வேண்டும் .
4 . அ ) வினாத்தாள் அச்சடித்தலுக்கான செலவினம் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கான செலவினம் - மேற்கண்டவாறு வசூலிக்கப்படும் தொகையிலிருந்து வினாத்தாள் அச்சடித்தல் , விடைக்குறிப்புகள் தயார் செய்தல் மற்றும் மாவட்டங்களுக்கு வினாத்தாள் விநியோகம் செய்தல் போன்ற பணிகளின் செலவினங்களுக்காக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் தெரிவிக்கப்படும் தொகையினை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடன் அரசு தேர்வுகள் இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் .
ஆ ) வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கான செலவினம் - வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திலிருந்து தேர்வு மையங்களுக்கு வினாத்தாட்களைக் கொண்டு செல்வதற்கும் மற்றும் விடைத்தாட்களை , வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் திரும்ப ஒப்படைப்பதற்கும் ஒரு நாளைக்கு ஒரு தேர்வு மையத்திற்கு ரூ . 50 ( ரூபாய் ஐம்பது மட்டும் ) தேர்வு மைய தலைமை ஆசிரியருக்கு வழங்க வேண்டும் . மேலும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கு சில்லரைச் செலவினமாக ஒரு நாளைக்கு ரூ . 60 ( ரூபாய் அறுபது ) வழங்குதல் வேண்டும் . இச்செலவினத்திற்குரிய பற்றுச்சீட்டுகளை தேர்வு மைய தலைமை ஆசிரியரிடமிருந்தும் , வினாத்தாள் கட்டுக்காப்பு மைய தலைமை ஆசிரியரிடமிருந்தும் சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர் பெற்று மாவட்டத் தேர்வுக்குழுவிற்கு ஒப்படைக்க வேண்டும் .
5 . விடைத்தாள் மதிப்பீட்டு பணி
வினாத்தாள் கட்டு காப்பு மையத்தில் ஒவ்வொரு நாளும் பெறப்படும் பள்ளி வாரியான விடைத்தாட்களை அன்றைய தினமே அந்த வினாத்தாள் கட்டுகாப்பு மையத்திற்கு உட்பட்ட பிற பள்ளிகளுக்கு மதிப்பீட்டு பணிக்காக மாற்றி கொடுத்து சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஒப்புதல் பெற வேண்டும் . மேலும் , அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்படும் விடைத்தாள்கள் குறிப்புகளையும் விடைத்தாள் கட்டுகளுடன் சேர்த்து சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் . மதிப்பீட்டு பணி நிறைவடைந்தவுடன் 5 ஆம் வகுப்பிற்குரிய விடைத்தாட்களை 28 . 04 . 2020 க்குள்ளும் , 8 ஆம் வகுப்பிற்குரிய விடைத்தாட்களை 25 . 04 . 2020 க்குள்ளும் , சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் மதிப்பெண் பட்டியலுடன் ஒப்படைக்க சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வேண்டும் .
6 . மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாட்களை வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் பாதுகாத்தல் மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாட்களை வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும் . அரசு தேர்வுகள் இயக்ககத்திலிருந்து கோரப்படும்போது விடைத்தாள்களை ஒப்படைக்க வேண்டும் .
7 . மதிப்பெண் பதிவேடு
பள்ளி வாரியான மதிப்பெண் பட்டியலை வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திலிருந்து சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் பெற்று வகுப்பு மற்றும் பிரிவு வாரியாக பள்ளிகளில் பராமரிக்க வேண்டும் . தங்கள் மாவட்டத்தில் மாநில பாடதிட்டத்தினை பின்பற்றி செயல்படும் அனைத்துப் பள்ளிகளும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கு மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது . மேலும் , இப்பொருள் சார்ந்து தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் உரிய வழிகாட்டுதல்களை வழங்கி 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை சிறப்பாக நடத்துவதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
DEE - 5,8th Public Examination 2020 Regarding Proceedings ( pdf ) - Download here...