Search

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ள மாணவர், பெற்றோருக்கு உளவியல் ஆலோசனைகள்!

Friday, 24 January 2020


மதிப்பெண்கள் ஒருபோதும் புத்திசாலித்தனம், திறமைக்கு இணையாக இருப்பதில்லை.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது1880-ம் ஆண்டு வாக்கில்தான் இந்தியாவில் பொதுத் தேர்வு அறிமுகமானது. தங்கள் ஆளுகைக்குக் கீழ் இந்தியர்களை எழுத்தர், கணக்கராகப் பணிபுரிய வைக்க, ஆங்கிலேயர்கள் தேர்வு என்னும் முறையைப் பின்பற்றி வடிகட்டினர். 1970-களின் பிற்பகுதி வரை அந்தத் தேர்வே அமலில் இருந்தது. கோத்தாரிக் கல்விக் குழுவின் பரிந்துரை +2 தேர்வுக்கு வித்திட்டது. இதனால் பள்ளிப் பருவத்தில் 2 தேர்வுகள் நடைமுறை அறிமுகமானது. தனியார் பள்ளிகள் +1 கற்பிக்காமல் +2 வகுப்பை நேரடியாகக் கற்பித்ததை அடுத்து 11-ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு, கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு, 5 மற்றும் 8-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு முறையைப் பரிந்துரைத்தது. இதைப் பின்பற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேர்வு குறித்த அச்சம், அழுத்தம் என எதையுமே அறியாமல் தமிழக ஆரம்ப, நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வை விரைவில் எழுத உள்ளனர்.

''எனக்கு பயமா இருக்கு..!'' என்றுதான் மஹா ஸ்வேதா பேச ஆரம்பிக்கிறாள். ஈரோடு, காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவி அவர். ''கிராமத்துல இருந்து படிக்க வர்றேங்க. வீட்டு வேலையும் செஞ்சிட்டுதான் ஸ்கூல் வரமுடியும். 3 டெர்மும் சேர்த்துப் படிக்கணுமாம்'' என்கிறாள்.

சக மாணவி இலக்கியா கூறும்போது, ''கட்டிட வேலைக்குப் போற அப்பா, அம்மா, நீ பாஸ் ஆயிடுவியா?ன்னு கேக்கறாங்க. ஸ்கூல் வரவே யோசனையா இருக்கு'' என்று தயங்குகிறாள்.

பொதுத் தேர்வால் நாங்கள் கற்பிக்கும் முறைகளே மாறிவிட்டது' என்று வேதனைப்படுகிறார் அப்பள்ளி ஆங்கில ஆசிரியர் மாலதி. ''முன்புபோல செயல்வழிக் கற்றல், காணொலி, நடனம், விளையாட்டு என்று கற்பிப்பதற்குப் பதிலாக கேள்வி- பதில்களை திரும்பப் படிக்கச் சொல்வது, பாடத் திட்டத்தில் இருந்து எப்படிக் கேள்விகள் கேட்கப்படும் என்று சொல்வது ஆகிய முறையில் கற்பிக்கிறோம்'' என்கிறார்.

அம்மாதான் ரொம்ப பயப்படறாங்க!

''ஃபெயில் ஆகிடுவேனோன்னு தோணிக்கிட்டே இருக்கு டீச்சர்'' என்று மழலை மாறாத குரலில் சொல்கிறான் அஸ்தினாபுரம் தொடக்கப்பள்ளியின் 5-ம் வகுப்பு மாணவன் ஆகாஷ். ''வீட்ல 400-க்கும் மேல மார்க் வாங்கச் சொல்றாங்க; முடியுமான்னு தெரியல டீச்சர். அம்மாதான் ரொம்ப பயப்படறாங்க'' என்கிறார் பாலாஜி.

பேனாவைப் பிடித்து சரளமாகக் கூட எழுதிப் பழகாத பிஞ்சு விரல்கள் இப்போது பொதுத் தேர்வுக்குத் தயாராகி வருகின்றன. இத்தகைய மாணவர்கள் தைரியத்துடன் தேர்வெழுத ஆலோசனை சொல்கிறார் மனநல மருத்துவர் டி.வி.அசோகன்.



''அம்மாவும் சிறு குழந்தையும் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். பாம்பொன்று அங்கே வருகிறது. குழந்தை சிரித்துக் கொண்டே கையை நீட்டுகிறது. திடீரென விழிக்கும் தாய், அலறியடித்து குழந்தையைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறார். பாம்புக்கும் பொம்மைக்கும் வித்தியாசம் தெரியாமல்தான் குழந்தைகள் இருக்கின்றனர். வளர வளரத்தான் அவர்கள் அனுபவம் பெறுகின்றனர்.

தேர்வு என்பது ஒருவித வடிகட்டல் முறை. அதைவிட விளையாட்டு, பாட்டு, நடனம், தற்காப்புக் கலைகள் என திறன் சார்ந்தவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய வயதில், மனப்பாடக் கல்வி, தேர்வு முறை என்பது குழந்தைகளின் மனதில் பயத்தே ஏற்படுத்தும். இத்தகைய சிறுவர்களுக்குப் பொதுத் தேர்வு என்பதைக் கவனத்துடன் அணுக வேண்டும்.

குழந்தைகளை எப்படி அணுக வேண்டும்? * பெற்றோர் முதலில் தங்களின் தேர்வு பயத்தைப் போக்க வேண்டும். அவர்களின் பயமே குழந்தைகளுக்கும் கடத்தப்படுகிறது. * உங்களின் குழந்தைகளை தயவுசெய்து மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள். வேண்டுமெனில் கடந்த காலத்தோடு சுய ஒப்பீடு செய்து கொள்ளலாம். * அவர்கள் என்னவாக இருக்கிறார்களோ, அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களின் மரபணு மற்றும் வளர்ப்பில்தான் குழந்தை உருவாகி இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள். * 5 வயதுக் குழந்தையால் 15 வயதுக் குழந்தைக்கான கற்றலைப் பின்பற்ற முடியாது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.


* குறைகளைத் தனியாக இருக்கும்போது சொல்லுங்கள். நிறைகளை எல்லோரின் முன்னாலும் பாராட்டிச் சொல்லுங்கள். * குழந்தைகளைக் குறைகூறும் போக்கு வேண்டாம். குறைகளைப் புரிந்துகொண்டு நீக்க முயலுங்கள். * பள்ளி முடித்து மகன்/மகள் வந்ததும் சாப்பிட்டாயா என்று கேளுங்கள். எத்தனை முறை சிரித்தாய் என்று விசாரியுங்கள். * குழந்தைகளின் நிறைவான தூக்கத்தை உறுதி செய்யுங்கள்; விளையாடுவதை ஊக்குவியுங்கள். * எந்த சூழலில் இருந்தும் மீண்டெழும் மன உறுதியை குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்க வேண்டும்.

மாணவர்கள் எப்படிப் படிக்க வேண்டும்? * இரவு உறக்கத்துக்குப் பிறகு மூளை சுறுசுறுப்புடன் செயல்படும் என்பதால் புதிய பாடங்களைக் காலை நேரத்தில் படிக்க வேண்டும். * ஏற்கெனவே படித்தவற்றை மீண்டும் படிக்க மதிய நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். * இரவில் நன்கு படித்தவற்றை சொல்லிப் பார்க்கலாம்; எழுதிப் பார்க்கலாம்.



தேர்வு நாளில் குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? * குளியலுக்குப் பிறகு மிதமான உணவை சாப்பிடக் கொடுங்கள். * தேர்வு நாளில்காய்ச்சல், சளி உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். * மாணவர்களுக்குத் தேவையான பென்சில், பேனா, அழிப்பான் உள்ளிட்ட அடிப்படையான பொருட்கள் இருப்பதை உறுதி செய்யுங்கள். * துண்டு, தண்ணீர் பாட்டில் ஆகியவற்றைக் கொடுத்தனுப்புங்கள். * இது உலகப் போர் தினமல்ல; இது இன்னொரு நாளே என்று உற்சாகப்படுத்துங்கள். * முக்கியமாகக் கிளம்பும்போது பதற்றத்தை ஏற்படுத்தாதீர்கள்; திட்டாதீர்கள்'' என்கிறார் மனநல மருத்துவர் டி.வி.அசோகன்.

பிஞ்சுகளின் நெஞ்சுக்கு அறிவுரை என்றால் என்னவென்றே தெரியாது. எதையுமே புத்திமதியாகச் சொல்லாமல், விளையாட்டாக எடுத்துச் சொல்லுங்கள். தேர்வும் மதிப்பெண்களும் மட்டுமே குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானித்துவிடாது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

- க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
 

Most Reading

Tags

Sidebar One