ஒரு பள்ளி ஆண்டு விழாவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள உங்கள் மாணவர்களை தயார் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் கீழ்கண்ட காரணங்களை யோசித்து அதற்கேற்ப தயார் செய்ய வேண்டும்.
போட்டி நடைபெறும் நாள்?
போட்டி நடைபெறுவதற்கான காரணம்?
(ஆசிரியார் தின விழாவா? குழந்தைகள் தின விழாவா?, அறிவியல் கண்காட்சியா?)
உதாரணமாக மாறுவேட போட்டி எனில் போட்டியில் வழங்கப்படும் பரிசுகள் எத்தனை?
மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது போட்டியில் பரிசுக்குரியவரை தீர்மானிக்கும் நடுவர் யார்? ( நடுவர் விஞ்ஞானி – எனில் அறிவியல் அறிஞரை போல் வேடமிடலாம்., ஆன்மீகவாதி – எனில் கடவுள்களை போல வேடமிடலாம்., அரசியல்வாதி – எனில் முதுபெரும் அரசியல் தலைவரை போல வேடமிடலாம்.)
இதுபோன்று பள்ளி அளவிலான போட்டிகளுக்கு நம் மாணவர்களை தயார்செய்ய வேண்டும் என்றாலே இத்தனை காரணிகளை நாம் கவனித்து தயார் செய்ய வேண்டியுள்ளது எனில் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் தகுதி தேர்வுக்கு தயார் ஆவதற்க்கு நாம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும்.
இனி அடுத்த தகுதி தேர்வு எவ்வாறு இருக்கும் என பார்ப்போம்?
1. தேசிய அளவிளான தகுதித் தேர்விலேயே 5 முதல் 10 சதவீதம் தான் தேர்ச்சி சதவீதம் இருப்பதால் கேள்வித்தாள் தயாரிப்பில் எந்த வித சமரசத்துக்கும் இடமில்லை என ஏற்கனவே TRB அறிவித்துள்ளதை கவனிக்க வேண்டும்.
2. இது ஆசிரியர் தகுதி தேர்வு தானே தவிர ஆசிரியர் பணிநியமன தேர்வு கிடையாது என நாம் அனைவரும் நன்கு அறிவோம்.
3. அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர் மட்டுமே பணிநியமனம் பெற முடியும் என்ற நிலையில் போட்டி அதிகமாக இருக்கும்.
இந்த தேர்விலேயே தகுதி தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பணிநியமனம் கிடைக்குமா? இல்லையா? என்ற பயம் இறுதிநாள் வரை பெரும்பாலோருக்கு இருந்த நிலையில் அடுத்த முறை எவ்வளவு பணியிடங்கள் காலி ஏற்படும்? அப்பணியிடங்கள் அனைத்துக்கும்
ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்களா? என எண்ணிப்பார்க்க வேண்டும்.
தகுதி தேர்வு என்றால் எப்படி இருக்கும் என தெரியாத நிலையில் 0.3 சதவீதம் தேர்வர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்த மறுதேர்வில் 3 சதவீதத்திற்கும் அதிகமான தேர்வர்கள் வெற்றி பெற்றுள்ளனர். எனவே அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது ஜுலை மாத தேர்வில் தற்போதைய நிலையை விட அதிகமான தேர்வர்களே வெற்றி பெறுவார்கள் என ஊகித்தறிய இயலும்
குறைவான பணியிடங்கள், அதிகமானோர் தேர்ச்சி பெறும் நிலையில் தகுதி தேர்வில் தேர்ச்சி மட்டும் போதாது. மிக அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் என்பதை மனதில் கொள்ளவும்.
அடுத்த தகுதித்தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆகலாம் என்பது குறித்து நாம் ஆலோசனை கேட்டது – கல்வியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பேரறிஞர்கள், ஐ.ஏ.எஸ் போன்ற போட்டித் தேர்வுகளை நடத்தும் விரிவுரையாளர்கள்
-போன்றோர்களிடம் அல்ல.
நாம் நான்கு வகையானோரிடம் கருத்து கேட்டு தொகுத்துள்ளோம்.
1. எவ்வாறெல்லாம் அலட்சியமாக செயல்பட கூடாது என்பதற்காக கடந்த தகுதி தேர்வில் 0 – 50 க்குள் மதிப்பெண் எடுத்தவர்களிடம் கருத்து கேட்டோம்.
2. எதனால் மிக குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் தேர்ச்சி பெற தவறினார்கள்? என்பதை அறிய 70 – 90 க்குள் மதிப்பெண் எடுத்தவர்களிடம் கேட்டோம்
3. எந்த காரணத்தால் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று தகுதி பெற்றீர்கள் என்று 90 – 95 க்குள் மதிப்பெண் எடுத்தவர்களிடம் கேட்டோம்
4. மிக முக்கியமாக 110 – 125 மதிப்பெண் பெற்றவர்களிடம் எவ்வாறு திட்டமிட்டு கடினமாக உழைத்தீர்கள் என கேட்டறிந்தோம்.
இவர்களின் கருத்துகளையே நாம் பிரதிபலிக்கிறோம்.
திட்டம் 1:
1. மிக அலட்சியமாக படிக்க கூடாது.
2. தற்போது நாம் படிப்பது தான் இத்தனை வருடங்களாக நாம் படித்ததின் இறுதி அத்தியாயம் என்பதை உணருங்கள்.
3. குறிப்பாக இனி ஒரு வாய்ப்பு கிடையாது. அப்படியே கிடைத்தாலும் நான் அதை பயன்படுத்த முயற்சிக்க மாட்டேன். இதுவே எனது இறுதி முயற்சி. என முடிவு செய்து இதில் நான் அதிக மதிப்பெண் பெற்று என்னுடைய பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், சமூகம், அரசு அனைத்திற்கும் எனது உண்மையான திறமையை உணர வைப்பேன் என உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.
திட்டம் 2
1. தாள் 1 ல் தேர்ச்சி பெற விரும்புபவர்கள் கீழ்கண்டவாறு படிக்க வேண்டும்
1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்கள் – 100 சதவீதம் ஆழ்ந்து படிக்க வேண்டும்.
11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்கள் – 25 சதவீதம் கழுகுப்பார்வையில் மேம்போக்காக படிக்க வேண்டும்.
ஆசிரியர் பயிற்சியின் போது படித்த உளவியல், கற்பிக்கும் முறைகள் மற்றும் உள்ள இதர புத்தகங்களை 70 சதவீதம் ஆழந்து படிக்க வேண்டும்.
இதே தலைப்பில் உள்ள பி.எட் மற்றும் எம்.எட் புத்தகங்களை 20 சதவீதம் மட்டுமே உழைத்து ஆரம்ப நிலையில் ஒருமுறையும் தேர்வுக்கு முந்தைய வாரத்தில் ஒருமுறையும் படிக்க வேண்டும்.
2. தாள் 2 ல் தேர்ச்சி பெற விரும்புபவர்கள் கீழ்கண்டவாறு படிக்க வேண்டும்
4 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்கள் – 100 சதவீதம் ஆழ்ந்து படிக்க வேண்டும்.
11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்கள் – 50 சதவீதம் கழுகுப்பார்வையில் மேம்போக்காக படிக்க வேண்டும்.
ஆசிரியர் பயிற்சியின் போது படித்த உளவியல், கற்பிக்கும் முறைகள் மற்றும் உள்ள இதர புத்தகங்களை 70 சதவீதம் ஆழந்து படிக்க வேண்டும்.
இதே தலைப்பில் உள்ள பி.எட் மற்றும் எம்.எட் புத்தகங்களை 60 சதவீதம் மட்டுமே உழைத்து ஆரம்ப நிலையில் ஒருமுறையும், நடுவில் ஒருமுறையும், தேர்வுக்கு முந்தைய வாரத்தில் ஒருமுறையும் படிக்க வேண்டும்.
இவ்வாறு நீங்கள் படிக்கும்போது ஒவ்வொரு வகுப்பில் உள்ள ஒவ்வொரு பாடத்தையும் தனித்தனியாக படிக்காமால் ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டால் அதே தலைப்பு தொடர்பாக மற்ற வகுப்புகளில் உள்ள பாடங்களையும் படித்து முடித்து விட வேண்டும்.
ஏனெனில் நமது பாடப்பகுதிகள் பெரும்பாலும் ”மரம் கிளை வகை” மற்றும் ”மை சிந்தும் முறை” பாடதிட்டத்தை கொண்டிருப்பவை.
உதாரணமாக 6 ஆம் வகுப்பில் இந்திய நிலங்கள் குறித்து படித்தால் 7 ஆம் வகுப்பில் மண் வகைகள் பற்றியும், அடுத்த வகுப்பில் மண்ணில் உள்ள கனிம வகைகளை பற்றியும் விரிவாக தரப்பட்டு இருக்கும். – இது நம் பாடப்பகுதிகள் எவ்வாறு தரப்பட்டிருக்கிறது என ஒரு உதரணத்துக்காக மட்டுமே நாம் கூறியுள்ளோம்.
எனவே ஒரு தலைப்பு பற்றி படிக்கும் போது இதர வகுப்புகளில் அதே தலைப்பில் உள்ள பாடங்களை படிக்கும்போது நமக்கு அது குறித்து விரிவான, முழுமையான அறிவு ஏற்படும்.
பாடப்பகுதிகளை படித்த பிறகு அவற்றில் உள்ள முக்கிய கருத்துகளை நீங்களே 1 மதிப்பெண் வினாவாக மாற்றி வினா மற்றும் விடைகளை ஒரு குறிப்பேட்டில் எழுதி வரவும். இக்குறிப்புகள் அடுத்த முறை நீங்கள் மீள்பயிற்சி செய்ய உதவும்.
மாவட்ட ஆட்சியர் தேர்வுக்கு தயாராகும் போது அதற்கான பாடதிட்டம் மட்டுமே தரப்பட்டு இருக்கும். அவை குறித்து பல்வேறு புத்தகங்களை நாம் தான் தேடி படிக்க வேண்டி இருக்கும். ஆனால் நமது ஆசிரியர் தகுதி தேர்வை பொறுத்தவரை 1 முதல் 12 ஆம் வரையுள்ள பாடபுத்தகங்களில் இருந்தே 80 சதவீதம் கேள்விகள் கேட்கப்படுகிறது. எனவே அவற்றை ஆழ்ந்து படித்தாலே போதுமானது.
ஒவ்வொரு பாடப்பகுதியையும் படித்தமுடித்த பிறகு நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள். மற்றவரை கேள்வி கேட்க செய்து அதற்கு பதிலளிக்க முற்படுங்கள். இது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். மேலும் எந்த வகையில் நீங்கள் பாடப்பகுதியை ஆழந்து படிக்க வேண்டும் என்ற அறிவையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தும்.
ஒரு பாடப்பகுதியை முழுமையாக பயின்ற பிறகு தான் அது குறித்த மீள்பயிற்சிக்காக மட்டுமே நீங்கள் ஆசிரியர் தகுதி தேர்வுக்காக இணையத்திலும், புத்தக வடிவிலும் உள்ள பல்வேறு பயிற்சி புத்தகங்களை நாட வேண்டும். முழுமையாக பயிற்சி புத்தகங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டாம்.
இறுதியாக எவ்வாறு படிப்பது என ஒரு மாதிரி நேர வழிகாட்டியை (Model Schedule) அமைத்துக்கொள்வோம்.
தோராயமாக ஜூன் மாதத்தில் அடுத்த தகுதி தேர்வு நடப்பதாக வைத்து கொள்வோம்.
அப்படியெனில் ஜனவரி முதல் மே மாதம் வரை இடையில் 5 மாதங்கள் மட்டுமே உள்ளன. தாள் 2 க்கு தயார் ஆவதெனில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள 15 பாட புத்தகங்களையும் நீங்கள் முதல் 3 மாதத்திற்குள்ளாகவே படித்து முடிக்க வேண்டும். அடுத்த நான்காவது மாதம் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாட புத்தகங்கள் மற்றும் DTEd, BEd, MEd பாட புத்தகங்களை படிக்க வேண்டும். இறுதியாக உள்ள 5 ஆவது மாதத்தில் அனைத்து புத்தகங்களையும் மறுமுறை படிக்கும் போது நீங்கள் எடுத்த குறிப்புகளை மீள் பார்வை செய்யவும், பயிற்சி புத்தகங்கள் மற்றும் Study Materials இல் உள்ள முக்கிய வினாக்களையும் மீள் பார்வை செய்ய பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
சரி முதல் 3 மாத்தில் எவ்வாறு 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள பாடங்களை படிப்பது?
ஒரு தலைப்பு குறித்து 6 ஆம் வகுப்பு புத்தகத்தில் உள்ள கருத்துகளை 15 நிமிடமும், அடுத்தடுத்த 7 முதல் 10 வகுப்பு வரையுள்ள புத்தகங்களை படிக்க நேர விகிதத்தை அதிகரித்துக்கொண்டே செல்லலாம்.
90 நாட்கள் / 15 புத்தகங்கள் = 6 நாட்கள். சிறிய வகுப்புகளில் உள்ள புத்தகங்களை நீங்கள் வேகமாக படித்து முடித்தால் அந்த நாட்களை 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் உள்ள புத்தகங்களை ஆழந்து படிக்க பயன்படுத்தி கொள்ள முடியும். இதேபோன்று அடுத்தடுத்த வகுப்பு புத்தகங்களை படிப்பதற்கும் தேவையான நாட்களை முதலிலேயே திட்டமிட்டு அதற்கேற்ப படியுங்கள்.
இறுதியாக தன்னம்பிக்கை அவசியம். 12 ஆம் வகுப்பு வரை படித்து மேற்கொண்டு ஆசிரியர் பயிற்சி 2 வருடமோ அல்லது கல்லூரியில் 3 வருடம் மற்றும் கல்வியியல் பட்டம் 1 வருடமோ பயின்ற பிறகும் இவர்களுக்கு 8 ஆம் வகுப்பு வரையுள்ள கேள்விகளுக்கே விடை தெரியவில்லை என்ற Media மற்றும் பொதுமக்களின் ஏளனத்தை மனதில் ஏற்றி வெறி கொண்டு படித்தால் வெற்றி நிச்சயம்!
நேர மேலாண்மை மிக முக்கியம். இப்போதிருந்தே அடுத்த தகுதித்தேர்வுக்கு தயார் ஆகுங்கள். குறைந்தபட்ச தகுதி 90 மதிப்பெண் நமக்கு அவசியம் இல்லை. 120 மதிப்பெண்ணுக்கு மேல் பெறுவதே குறைந்தபட்ச இலக்கு என கருதி படித்தால் அனைவரும் வெற்றி பெறலாம்.
No comments:
Post a Comment