தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தற்கால நிகழ்வுகள்
குடிமையியல் தேர்வு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் போதிலும் இந்தப்பகுதி அதன் முக்கியத்துவத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. எனினும் இந்தப் பிரிவில் கேட்கப்படும் கேள்விகளின் துல்லியமானத் தன்மையை தெரிந்து கொள்ள தேர்வு எழுதுவோர் முயல வேண்டும். தேர்வு எழுதும் அனைவரும் தேசிய சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை அறிந்து வைத்திருக்க வேண்டும், ஆனால் அதைவிட கூடுதலாக சிலவற்றை செய்ய வேண்டும். சிறிதளவு தேடலும் கடும் உழைப்பும் அவசியம் ஆகும். நாட்டு நடப்புகளையும் அதனால் பிறதுறைகளில் எத்தகைய தாக்கங்கள் ஏற்படும் என்பதையும் உணர்ந்து படிக்க வேண்டும்.
உதாரணமாக போட்டித் தேர்வு எழுதும் ஒருவர், ஒரு விஷயத்தை சாதாரண மக்கள் பார்ப்பதைவிட மிகவும் ஆழமாக பார்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் நீங்கள் வெற்றி பெற்று விடலாம்.
தேர்வில் நீங்கள் வெற்றிபெறும் வாய்ப்புகளை ஆக்கவும், அழிக்கவும், இந்தப் பிரிவால் முடியும். எனவே, தர்க்க ரீதியாகவும் ஆழமாகவும், விஷயம் சார்ந்தும் படிக்க வேண்டும் அதுமட்டுமின்றி தேவையான ஒரு விஷயத்திலிருந்து சம்பந்தமில்லாத விஷயங்களை பிரித்து அகற்றுவதற்கான திறமை உங்களுக்கு இருக்க வேண்டும்.
இந்தியா மற்றும் இந்திய தேசிய இயக்க வரலாறு
இந்தப்பிரிவுக்கு வழங்கப்படும் மதிப்பெண்களின் அளவு அண்மையில் மாறியுள்ளது. வரலாற்றின் பிற பிரிவுகளைவிட நவீன இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக NCERT வெளியிட்ட 12ம் வகுப்பு வரலாற்று புத்தகத்தை படியுங்கள்.
இந்தியா மற்றும் உலக புவியியல் NCERT வெளியிட்ட புவியியல் புத்தகங்களை படியுங்கள். சர்வதேச அளவிலும் நடைபெற்ற நாட்டு நடப்புகளை புவியியல் கோணத்திலும் புவி அரசியல் கோணத்திலும் படிக்க வேண்டும். தேர்வு எழுதுவதற்காக குறைந்தது மூன்று உலக வரைபடங்களை (Atlas) வைத்திருக்க வேண்டும். இவைதவிர இந்திய வரைப்படத்தையும் உலக வரைபடத்தையும் எப்போதும் சுவற்றில் தொங்க விட்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் எந்த ஓர் இடத்தையும் புரிந்து கொள்வதும், கண்டு பிடிப்பதும் ஒருவருக்கு எளிதானதாக இருக்கும் அதுமட்டுமின்றி இது நினைவாற்றலையும் அதிகரிக்கும்.
இந்திய ஆட்சி மற்றும் நிர்வாகம்
இந்தப் பிரிவில்தான் நாட்டு நடப்புகள் மிக அதிக அளவில் இடம் பெற்றிருக்கும். நாட்டு நடப்புகளுடன் சம்பந்தப்பட்ட இந்திய அரசியல் சாசனம் பற்றி கேள்விகள் கூட கேட்கப் படலாம். எந்த ஒருநாட்டு நடப்பு சம்பந்தப்பட் விஷயத்தையும் மிகவும் ஆழமாக படிக்கவேண்டும். அவ்வாறு செய்தால் இந்தப் பிரிவை வெற்றிகரமாக முடித்துவிடலாம். தி ஹிந்து நாளிதழில் வெளியாகும் தலையங்கங்களையும், அவற்றுடன் சம்பந்தப்பட்ட முன்னணி கட்டுரைகளையும் படிக்க வேண்டும்.
பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாடு
இந்தப் பிரிவும் நாட்டு நடப்புடன் சம்பந்தப்பட்ட ஒன்றுதான். இந்தப் பிரிவில் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் விடையளிப்பதற்கு தி எகனாமிக் டைம்ஸ் இதழின் தலையங்கங்களை படிப்பதே போதுமானது. குடிமையியல் பணிக்கான முதன்மைத் தேர்வுக்கான மிக முக்கியமான குறிப்பு ஆதாரம் (நாட்டு நடப்புகள் மற்றும் இந்தியப் பொருளாதாரம்) தி எகனாமிக் டைம்ஸ் தலையங்கங்கள் தான். எனவே, தி எகனாமிக் டைம்ஸ் இதழின் தலையங்கத்தை படிப்பதற்காக நாள் தோறும் அரைமணி நேரம் செலவிட்டால், அது முதன்மைத் தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அண்மையில் வெளியிடப்பட்ட பட்ஜெட் ஆவணங்கள், பொருளாதார ஆய்வறிக்கை நிதி ஆணைய அறிக்கைகள் ஆகியவற்றின் முக்கிய அம்சங்களும் விரல் நுனியில் இருக்க வேண்டும். 6 சூழலியல் குடிமையியல் பணித்தேர்வுக்கான பாடத்திட்டத்தில் அண்மையில் சேர்க்கப்பட்டுள்ள பிரிவு இதுவாகும்.
பொது அறிவியல்
கட்டுரைகளை படிப்பது இந்தப் பிரிவை எதிர் கொள்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் வெளியாகும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சிறப்பு மலரில் வெளியாகும் முக்கியமானக் கட்டுரைகளை படிப்பது எப்போதும் நல்லது.
முக்கிய அறிவுரைகள்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தலைப்புகளுக்கும் தயாராகும் போது அத்துறைகளில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால மாற்றங்களைத் தெரிந்துக் கொண்டிருப்பது நல்லது. தேர்வு எழுதும் சூழல் எவ்வாறு இருக்கும், அதை எதிர்கொள்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வதற்கு எளிய வழிகளும் உள்ளன. முதலில், ஒவ்வொருவரும் அகில இந்திய வானொலியில் இரவு 9 மணிக்கு ஒலிபரப்பாகும் ஆங்கிலச் செய்திகளையும் (News at Nine) - நிகழ்ச்சியையும் கேட்க வேண்டும்.
அடுத்த நாள் காலையில் ஒவ்வொருவரும் தி ஹிந்து நாளிதழை படிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது நாம் கேட்ட பின்னர் படித்த விஷயம் மனதில் நன்றாக பதியும். அதன்பிறகு இது தொடர்பாக குடிமையியல் பணி போட்டித் தேர்வுக்காக வெளிவரும் ஏதேனும் ஒரு முன்னணி பொது அறிவு இதழில் வெளியான கட்டுரையையும் படிக்க வேண்டும்.
முதன்மைத் தேர்வு
முதன்மைத் தேர்வானது நிர்வாகத் திறன், முடிவெடுக்கும் வல்லமை, பிரச்சனைகளை தீர்க்கும் திறன், மனிதர்களுக்கிடையே தகவல் பரிமாற்றத் திறன்கள் ஆகியவற்றை இப்பிரிவு சோதித்துப்பார்க்கிறது. இந்தத் தாள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதன் மூலம் முதன்மைத் தேர்வு என்பது ஒரே பந்தைக் கொண்டு ஒரே வேகத்தில் எல்லா வீரர்களையும் சோதிக்கும் போட்டியைப் போன்றதாக மாறியுள்ளது. CAT தேர்வில் சோதிக்கப்படுவதைப் போன்று இத்தேர்வில் மேலாளருக்குரிய திறமை சோதிக்கப்படாது, நிர்வாகத்திறமையுடன் சோதிக்கப்படும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
இரண்டுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முதலில் தினத்தோறும் பயிற்சி பெறுவதற்கு ஒரு நல்ல வழிகாட்டி புத்தகத்தை வாங்குங்கள். இரண்டாம் தாளை எதிர்கொள்வதற்கு அதிக பயிற்சி தேவை. பயிற்சி தான் எதையும் சிறப்பானதாக்குகிறது.
புரிந்து கொள்ளும் திறன்
தினமும் இரு செய்தித்தாள்களின் தலையங்கங்களை, குறிப்பாக தி ஹிந்து மற்றும் தி எகனாமிக் டைம்ஸ் இதழ்களில் வெளியாகும் தலையங்கங்களை படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அவற்றைப் படித்து நீங்கள் புரிந்து கொண்ட விஷயங்களை சுருக்கமாக எழுதிப்பாருங்கள்.
தி ஹிந்து நாளிதழில் வெளியாகும் தலையங்கங்கள் எப்போதும் முக்கியமான நாட்டு நடப்பு விஷயங்களையே அடிப்படையாகக் கொண்டிருக்கும். படித்தவற்றை புரிந்து கொண்டு திருப்பி எழுதிபார்க்கும் வழக்கம் முதன்மை தாள்களை நீங்கள் சிறப்பாக எதிர்கொள்வதற்கு உதவும்.
தகவல் பரிமாற்றுத் திறன் உள்ளிட்ட மனிதத் திறன்கள்
இந்தப் பிரிவுக்கென குறிப்பிட்ட வரையறை எதுவும் இல்லை. இந்தப் பிரிவில் எத்தகைய வினாவை வேண்டுமானாலும் கேட்கும் உரிமை வினாத்தாள் தயாரிப்பவருக்கு உண்டு. CAT தேர்விலிருந்து CSAT தேர்வை வேறுபடுத்திக் காட்டுவது இந்தப் பிரிவுதான். இந்தப் பிரிவை சிறப்பாக கையாள வேண்டுமென நினைத்தால் ஏதேனும் ஒரு சர்ச்சையான விஷயத்தை எடுத்துக் கொண்டு அதை வித்தியாசமான முறையில் எப்படி தீர்க்கலாம் என்பது பற்றி ஆராயலாம். மாணவர்கள் தங்களை நிர்வாகிகளாக நினைத்துக் கொண்டு சர்ச்சைக்குரிய சூழலை அரசியல் சட்டப்படியான வழியில் எப்படி சமாளிக்கலாம் என்பது பற்றி ஆராயலாம். இதில் முக்கியமான வார்த்தையை அரசியல் சட்டம் என்ன சொல்கிறதோ அதேபோல் சிந்திக்கும் திறனை ஏற்படுத்திக் கொள்வது கட்டாயம் ஆகும்.
Logical Reasoning - இந்தப் பிரிவை எதிர்கொள்வதற்கு R.S. அகர்வால் எழுதிய புத்தகம் போதுமானது. பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை நன்றாக புரிந்துகொண்ட பிறகு பிரச்சனைகளை தீர்பதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும். இதற்கான பயிற்சிகளை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு மேற்கொள்ள வேண்டும். சூழ்நிலைக்கேற்றவாறு சிறப்பாக செயல்படும் தன்மையை வெளிப்படுத்துவதற்கு எப்போதும் முயல வேண்டும்.
SUDOKU புதிருக்கு விடை கான தினமும் ஐந்து நிமிடங்கள் ஒதுக்கவேண்டும். SUDOKU நம்மை அதற்கு அடிமையாக்கி விடும் என்பதால் அதற்கு ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஒதுக்காதீர்கள். புதிர்களை தீர்ப்பதன் மூலம் நமது அறிவுக்கு சற்று உணவளிப்பது புதிர்களுக்கு உடனடியாக விடையளிக்கும் திறனை அதிகரிக்கும் அதே போல் குறுக்கெழுத்துப் போட்டிகளையும் நிரப்ப முயல வேண்டும்.
இப்பிரிவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிப்பதற்காக வாய்ப்பாடு, சதவீத வாய்ப்பாடு போன்ற சூத்திரங்களை நினைவில் கொள்ள வேண்டும். இதற்காக பல்வேறு அட்டவணைகளையும் வரைபடங்களையும் செய்து பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வது தேர்வை எளிதாக அணுகுவதற்கு உதவியாக இருக்கும்.
ஆங்கில மொழியைப் புரிந்து கொள்ளும் திறன் இரண்டாம் தாளின் முதல் பிரிவுக்கு கூறப்பட்டவை அனைத்தும் இதற்கு மிகவும் பொருந்தும். ஆங்கில சொற்களை அதிக அளவில் தெரிந்து வைத்துக் வேண்டும்
பள்ளித் தேர்வுகளில் புரிந்து கொள்ளும் திறனை அறிவதற்கான கேள்விகள் நேரடியாகவும், 4 வாய்ப்புகளில் ஒன்றை தேர்ந்தேடுக்கும் வகையில் எளிமையாகவும் கேட்கப்படும். அவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து விடையளித்து விடலாம். ஆனால் இந்தத் தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட குறிப்புகள் தரப்பட்டு அவற்றில் எத்தனை சரி / தவறு என்பதை கண்டறியும்படி கோரப்படும். இந்த வகை வினாக்களில் ஏதேனும் மறைமுக அர்த்தம் உள்ளதா? என்பதை உறுதி செய்வதற்காக மிகவும் கவனமாகவும், திரும்பத் திரும்பவும் படிக்க வேண்டியிருக்கும். என்பதால் அதிக நேரத்தையும் சக்தியையும் செலவழிக்க வேண்டியிருக்கும். அவசரமாகவும், மேலோட்டமாகவும் படித்தால் அது தவறான விடையை தேர்வு செய்யும் நிலைக்கு நம்மைத் தள்ளிவிடும். எனவே வினாவில் தரப்பட்டுள்ள 4 குறிப்புகளையும் தொடர், தொடராக மீண்டும் மீண்டும் படித்து புரிந்து கொண்டு பதிலளிக்க வேண்டும்
முதல் நிலைத் தேர்வுக்கான வினாத் தாள்களின் முதல் பக்கத்தில் புரிந்து கொள்ளப்பட வேண்டிய பத்தி இருக்கும். ஆனால் அந்த பத்தியின் அடிப்படையில் எழுப்பப்படும் வினாக்கள் 3வது 8வது பக்கத்தில் தான் (முதல் பக்கத்தில் உள்ள பத்தி ஆங்கிலத்தில் இருக்கும். இரண்டாவது பத்தியில் அதன் ஹிந்திமொழிப்பெயர்ப்பு இடம் பெற்றிருக்கும்) இடம் பெற்றிருக்கும் இதற்காக பக்கங்களை அடிக்கடி திருப்ப வேண்டியிருக்கும். அதிலும் குறிப்பாக 4 குறிப்புகளைக் கொடுத்து விடை எழுதக் கூடிய வினாவாக இருந்தால், இன்னும் அதிக முறை பக்கங்களை திருப்ப வேண்டியிருக்கும். எனவே, இதற்கு பயிற்சி தேவை.
படகுகளின் வேகம், நகரும் ரயில்கள், வணிக கூட்டுமுயற்சி, திரவக் கலப்பு போன்றவை தொடர்பான வினாக்களுக்கு விடையளிக்க கடினமான சூத்திரங்களை பயன்படுத்தி மூளையைக் குழப்பிக் கொண்டிருக்கத் தேவையில்லை. அதிவேகமாக கணக்கிடுவதற்கு வேதக்கணித சூத்திரங்களையும், சீனத் தேற்றங்களையும் நிபுணத்துவத்துடன் கற்றுக்கொள்வது அவசியமாகும்.
குடிமையியல் பணிக்கான போட்டித் தேர்வுகளைப் பொறுத்தவரை, இதுவரைப் பார்த்த திறனறித் தேர்வுகளிலேயே இதுதான் மிகமிக எளிதானது. அடுத்த ஆண்டிற்கான வினாத்தாளும் இதே அளவுக்கு எளிதானதாக இருக்குமா? என்று எவரும் உறுதியாக கூறமுடியாது. ஏனெனில் தேர்வுகளை மிகவும் கடினமாக நடத்துவதில்தான் UPSC பெருமை கொள்கிறது.
Probationary Officer தேர்வு, CAT தேர்வு ஆகியவற்றுக்கு விரைவாக கணக்கிடும் திறன் கண்டிப்பாக தேவை. ஆனால் CSAT தேர்வுக்கு கணிதத்தில் புரிதலும், கணக்கிடுவதில் துல்லியத் தன்மையையும் போதுமானது. இதற்கு மனப்பாடம் செய்யவோ, 16 இலக்க எண்ணுக்கு கணம் (Cube root) காண்பதோ அவசியமில்லை.
குடிமையியல் பணிக்கான முதல்நிலைத் தேர்வுக்கு இனி விரைவாக படிக்கும் திறன் மிகவும் அவசியம் ஆகும். பொது அறிவுத் தேர்விலும் திறனறித் தேர்விலும் குறிப்புகளை படித்து விடையளிக்கும் 4 குறிப்பு கேள்விகள் இடம் பெறுகின்றன. இவை நமது நேரத்தை சாப்பிடக் கூடியவையாகும்.
தேர்வின் போக்கு மாறிவிட்டதால், கலை, வணிகம் போன்ற படிப்புகளைப் படித்தவர்களைவிட பொறியாளர்கள் MBA பட்டதாரிகள், அறிவியல் பட்டதாரிகள் ஆகியோருக்கு தான் அதிகவாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. 9 பொது அறிவுத்தாளில் கேட்கப்படும் அறிவியல் சமபந்தப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்க அறிவியல் பாடத்தை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும் என்று எந்த தேவையுமில்லை. NCERT புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்கள் ஆகியவற்றை முறையாக படித்து தேர்வுக்கு தயாராவோர் இந்த கேள்விகளில் பெரும்பாலானவற்றுக்கு விடையளிக்க முடியும்.
அதேபோல் ரகசிய திறனறிதல் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு தற்போது போதுமான நேரமும், யோசனைகளும் உள்ளன. எனவே MBA படிக்காதவராகவோ, CAT, வங்கி PO தேர்வு எழுதாதவராகவோ இருப்பது உங்களை எந்த வகையிலும் பாதிக்காது. ஏனெனில் உங்களின் திறனறித் திறமைகளை சரியான திசையில் வளர்த்துக் கொள்ள உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும்.
இந்தத் தேர்வை புதிதாக எழுதுவோரும் ஏற்கனவே எழுதிக் கொண்டிருப்போரும் தங்களை வெவ்வேறு வகையில் கருதிக்கொள்வார்கள். அதாவது புதிதாக தேர்வு எழுத வருவோர் அனுபவம் இல்லாதவர்கள் என்றும் ஏற்கனவே தேர்வு எழுதிக்கொண்டிருப்பவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்றும் கருதிக்கொள்வார்கள், ஆனால் குடிமைப்பணித் தேர்வுகளைப் பொறுத்தவரை அதிலும் குறிப்பாக தற்போதைய சூழலில் அனைவரும், ஆரம்பத்திலிருந்துதான் தங்களின் முயற்சியை தொடர வேண்டும். இப்போது எவரும் உயர்ந்தவர் அல்ல. கடுமையான உழைப்பும், பயிற்சியும் தான் வெற்றியின் பயன்களைப் பெற்றுத்தரும்.
No comments:
Post a Comment