தமிழக நிகழ்வுகள்
தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம்)-ன் கீழ் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு சுகாதாரத் திட்ட அலுவலகத்தில் கையெழுத்தானது.
குறிப்பு:
மத்திய அரசின் திட்டத்துடன், தமிழக திட்டத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதன் மூலம் சமூக பொருளாதார சாதி வாரியான கணக்கெடுப்பு புள்ளி விவரம் பட்டியல் படி தமிழகத்தில் சுமார் 2.85 கோடி பேர் இனி ரூ.5 லட்சம் வரையிலான கட்டணமில்லா இலவச மருத்துவ சேவையை காப்பீட்டின் கீழ் தகுந்த மருத்துவமனைகளில் பெற முடியும்.
இந்திய நிகழ்வுகள்
மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு “தூய்மையே உண்மையான சேவை” இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
குறிப்பு:
2014ம் ஆண்டு அக்டோபர் 2ம் நாள் மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு “தூய்மை இந்தியா” (சுவச் பாரத்) திட்டத்தை தொடங்கினார். அசுத்தம், குப்பைகள் இல்லாத தூய்மையான இந்தியாவை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் “தூய்மையே உண்மையான சேவை” இயக்கம் தொடங்கப்பட உள்ளது.
பிம்ஸ்டெக் அமைப்பின் முதலாவது கூட்டு இராணுவப் பயிற்சி (BIMSTEC Joint Military Exercise – 2018) மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் தொடங்கியுள்ளது. இந்த இராணுவ போர் பயிற்சியில் பிம்ஸ்டெக் நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
குறிப்பு : BIMSTEC (Bay of Bengal Initiative For Multi Sectoral Technical and Economic Cooperation)
பங்களாதேஷ், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம் மற்றும் பூடான் ஆகிய ஏழு நாடுகள் இணைந்து பொருளாதார ஒத்துழைப்பிற்காக BIMSTEC அமைப்பு 1997ல் தொடங்கப்பட்டது.
இதன் தலைமையகம் – வங்காள தேசத்தின் டாக்காவில் உள்ளது.
நாமடிக் எலிபண்ட் – 2018 (Exercise Nomatic Elephant – 2018)
“நாடோடி யானை” எனப் பொருள்படும் “நாமடிக் எலிபெண்ட் – 2018” என்னும் கூட்டு இராணுவப் பயிற்சி இந்தியா மற்றும் மங்கோலியா நாடுகளுக்கிடையே, மங்கோலியா நாட்டின் உல்லன்பட்டார் நகரில் டைவ் ஹில்ஸ் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்திய இராணுவத்தின் “17வது பஞ்சாப் படைப்பிரிவு” மற்றும் “மங்கோலியா ராணுவத்தின் 84வது படைப்பிரிவு” ஆகியவை இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளன
குறிப்பு:
Nomatic Elephant – பயிற்சி 2006ம் ஆண்டு முதல் இந்தியா – மங்கோலியா நாடுகளுக்கிடையே நடைபெற்று வருகிறது.
உலக நிகழ்வுகள்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில், ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 20 நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் பங்கேற்கும் மூன்றாவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு நடைபெற்றது.
பிரான்ஸ் நாட்டின் மாநிலமான சென்டர் வால்டி லோரியுடன், தமிழ்நாடு அரசின் பண்பாட்டுத்துறை இணைந்து பண்பாட்டு பரிமாற்றம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இம்மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது.
விளையாட்டு நிகழ்வுகள்
செக் குடியரசு நாட்டின் ஆஸ்ட்ராவர் நகரில் நடைபெற்ற 3-வது கண்டங்களுக்கு இடையிலான (கான்டினென்டல் கோப்பை) தடகளப் போட்டியில் ஆண்களுக்கான மும்முறை நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் “ஆர்பிந்தர் சிங்” வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
அமெரிக்காவின் கிறிஸ்டியன் டெய்லர் தங்க பதக்கமும், பர்கினோ பாசோ நாட்டைச் சேர்ந்த ஹெக்ஸ் பேப்ரிஸ் ஜாங்கோ வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளனர்.
விருதுகள்
2019ம் ஆண்டின் மிஸ் அமெரிக்கா’வாக (Miss America – 2019) “நியா இமானி பிராங்க்ளின் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நியா இமானி பிராங்க்ளின் (Nia Franklin) நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்தவர்
சாதாரண ஸ்மார்ட் போனை “சோனார்” சாதனமாக மாற்றும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்ததற்காக தமிழ்நாட்டின் மதுரை நகரைச் சேர்ந்த ராஜலட்சுமி நந்தகுமார் என்பவருக்கு 2018ம் ஆண்டிற்குரிய அமெரிக்காவின் புகழ்பெற்ற “மார்கோனி சொசைட்டி பால் இளம் அறிஞர் விருது” வழங்கப்பட்டுள்ளது.
இவரது கண்டுபிடிப்பு மூலம் உடல் ரீதியான செயல்பாடுகள், சுவாசம் போன்றவற்றை அவரது உடலை தொடாமலேயே சோனார் சாதனம் மூலம் கண்டுபிடிக்க முடியும்.
குறிப்பு : [SONAR – Sound Navigation And Ranging] சோனார் என்பது நீரில் மூழ்கிய பொருட்களை ஒலி அலைகளை கொண்டு கண்டுபிடிக்கும் தொழில் நுட்பம் ஆகும்.
புத்தகங்கள்
“தி ரூல் பிரேக்கர்ஸ்” (The Rule Breakers) புத்தகம் – பீரித்தி ஷெனாய் எழுதியுள்ள இப்புத்தகம் செப்டம்பர் 17 அன்று வெளியிடப்படவுள்ளது.